யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக் கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார்.
அங்கு அவர் வழங்கிய ஊடக விபரிப்பில் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு :
பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.