இந்தியாவிலிருந்து பீடி இலைகளைக் கடத்தி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14.07.2023) இரவு கற்பிட்டி சின்ன அரிச்சல் கலப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல் மார்க்கமாகக் கடத்தி வருவதாக விஜய கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது16 உறைகளில் 530 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் பீடி இலைகளைக் கடத்தி வந்த பைபர் படகு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
கடத்தி வந்த பைபர் படகு
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பீடி இலைகளைக் கடத்தி வந்த பைபர் படகு ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.