கொழும்புக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் (13) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.
இதையடுத்து, கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் சேவை இன்று மீள செயற்பட ஆரம்பித்துள்ளது.
அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டது.
மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில், இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த ரயில் மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய மார்க்கத்தின் ஊடாக ரயில்கள் மணித்தியாலததிற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என்ற போதிலும், முதலில் சில நாட்களுக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையில் 45 நிமிடங்களிலும், கொழும்பு கோட்டையில் இருந்து ஓமந்தைக்கு 5 மணித்தியாலயங்களிலும் பயணிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய உதவி திட்டத்தின் கீழ் ரயில் வழித்தட புனரமைப்பு பணிகளுக்காக, கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல், கொழும்பு யாழ்ப்பாணம் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டது.
முதலாம் கட்டமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் வழித்தட சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் முன்னதாக நாளாந்தம் 5 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை 3 சேவைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலைய அத்தியட்சகர் ரி. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கல்கிஸையிலிருந்து அதிகாலை 5.10க்கு பயணத்தை ஆரம்பிக்கும் சேவையும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15க்கு புறப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சேவைகளை, ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.