கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து 175 பயணிகளுடன் விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர். அதனை தொடர்ந்து கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு இன்று அதிகாலை 4 மணிக்கு, விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 175 பயணிகள் ஷார்ஜாவுக்கு செல்ல தயாராக இருந்தனர். விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது. இதனை அறிந்து கொண்ட விமானி உடனடியாக கோவை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அந்த விமானம் மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். அவர்களில் கோவையை சேர்ந்தவர்களை வீட்டிற்கும், மற்றவர்களை ஓட்டலிலும் தங்க வைத்தனர்.
இதனை தொடர்ந்து விமான நிலைய பொறியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று, விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர். விமானத்தில் தற்போது பராமரிப்பு பணிகளையும் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் மீண்டும் விமானம் எப்போது கோவையில் இருந்து புறப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படும். விமானி பறவை மோதியது பார்த்து உடனே தகவல் கொடுத்ததால் 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.