Wednesday, January 1, 2025
HomeSrilankaதமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது! அரசு திட்டவட்டம்.

தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது! அரசு திட்டவட்டம்.

“தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது. அரசு அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது.”

இவ்வாறு இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்க் கட்சிகள் கடிதம் அனுப்புவது குறித்து அரசின் நிலைப்பாடு தொடர்பாக ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிகழும். இலங்கை தொடர்பாக இந்தியத் தரப்புக்குப் பல விடயங்கள் தெரிவிக்கப்படும்.

குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகின்றது. இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு ஜனாதிபதி அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்தியத் தரப்புக்குத் தெளிவுபடுத்துவார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.

13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. நாடாளுமன்றத்தின் மூலமே இது அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டி தீர்வைக் கோருகின்றன. இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசு இதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது. இருக்கின்ற அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு மூலம் நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments