வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் இந்திய அணி அசத்தலாக பந்து வீசியது. குறிப்பாக, அஸ்வின், ஜடேஜா சுழலில் அந்த அணி சிக்கியது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது. இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.