அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலைமையில் நேற்றைய தினம்(12) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி வருகின்ற நிலைமையில் இறுதி யுத்தத்தில் சரணடைந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு பணிகள் சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெற்று வருவதாகவும் எனவே சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உடலங்கள் யாருடையது என்பது தொடர்பாக கண்டறியப்பட வேண்டும் எனவும் குறித்த செயற்பாடு சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியில் இடம் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.