தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில பேய்மழை பெய்தது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.
சிம்லா – மணாலி, சண்டிகர் – மணாலி, சிம்லா – குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேரை காணவில்லை என்றும், 100 பேர் காயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளது.