முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடியன் துப்பாக்கி எனப்படும் சட்டவிரோத துப்பாக்கியின் பாவனை அதிரித்துக்காணப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு இதன் செயற்பாடாக அண்மையில் இடியன் துப்பாக்கியால் இளைஞன் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலீஸ் பிரிவு ஜயன்கன்குளம் பொலீஸ் பிரிவுகளில் சட்டவிரோத துப்பாக்கியான இடியன் துப்பாக்கியின் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது.
காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காக இடியன் துப்பாக்கியினை பயன்படுத்துபவர்கள் தற்போது மனிதர்களை வேட்டையாடும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் தொடருமாக இருந்தால் இன்னம் பல மனித கொலைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் பொலீசார் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் கடந்த (09) அன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மல்லாவி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களிடையே இடம்பெற்ற முரண்பாடான நிலையினை அடுத்து குறித்த சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது 23 வயதான மகேந்திரன் டிலக்சன் என்ற இளைஞர் வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொல்லப்பட்டவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மல்லாவியில் கடந்த வருடம் நடந்த கொலை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களின் முன்னரே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு முன்னதாக கடந்த 7 ஆம் திகதி பாலையடி சந்திக்கு அண்மையாக டிலக்சன் தரப்பும் மற்றொரு தரப்பும் வீதியில் மோதிக் கொண்டுள்ளனர்.
பின்னர் இரு தரப்பும் சமரசப்பட்டு வீடுகளிற்கு திரும்பியுள்ளனர்.
இந்த மோதலின் போது எதிர்தரப்பிள்ள ஒருவருக்கு டிலக்சன் (கொல்லப்பட்டவர்) இரும்புக் கம்பியினால் அடித்ததாக கூறப்படுகிறது.
இரும்புக் கம்பியினால் அடி வாங்கிய இளைஞரின் மைத்துனரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. தனது மைத்துனருக்கு இரும்புக் கம்பியினால் அடித்த டிலக்சனை பழிவாங்குவதற்காக இடியன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குறித்த இளைஞனின் வீட்டுக்குச்சென்றுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாய், தந்தை மற்றும் தங்கை கதற கதற பூட்டிய அறைக்குள் இருந்த டிலக்சனை சிறிய ஓட்டைக்குள்ளால் பார்த்து தலையில் சுட்டுள்ளார்.
தலையில் காயமடைந்து அந்த இடத்திலேயே டிலக்சன் உயிரிழந்தார்.
மல்லாவி போலீசார் மற்றும் குற்றப்புலனாய்வு துறையினர் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மல்லாவி பொலிசாரினால் (11) அன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
(11) அன்று கைது செய்யப்பட்ட மூவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதேவேளை மூவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.