பொலிஸாரின் உத்தரவை மீறி டிஃபென்டர் ரக ஜீப்பை ஓட்டிச் சென்ற மூன்று யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவல மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு உயர்தர பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் மருதானை டீன்ஸ் வீதிப் பகுதியில் அஜாக்கிரதையாகச் சென்ற டிஃபென்டர் வாகனத்தை நிறுத்துமாறு வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த மருதானை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமிக்ஞை காட்டினர்.
எனினும் பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த வாகனத்தை அவர்கள் செலுத்தி சென்றுள்ளனர்
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் வாகனம் தொடர்பில் பொலிஸ் நடவடிக்கை பிரிவுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி, மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் வாகனத்தை நிறுத்துமாறு மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் சமிக்ஞை செய்தார். எனினும் குறித்த உத்தரவையும் மீறி டிஃபென்டர் வாகனம் முன்னோக்கி செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், கலே பொலவுக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரை நிறுத்துமாறு சைகை செய்த போதும், இளம் பெண்கள் குழு நிறுத்தாமல் டிஃபென்டர் காரை அவர்களுக்கு முன்னால் செலுத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸார் அந்த வாகனத்தை துரத்தி சென்று தடுத்து நிறுத்தினர். இதன்போது குறித்த யுவதிகளுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் சந்தேகத்திற்குரிய யுவதிகள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.