கல்வித்துறையில் அடுத்த வருடத்திற்குள் மாற்றம் கொண்டு வரப்பட்டு 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான மாணவர்களை உருவாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10.07.2023) நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம்
மேலும் கூறுகையில், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024ஆம் ஆண்டு முதல் மீள ஆரம்பிக்கப்படும்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் கல்வியமைச்சு மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்படாமல் மாகாண அமைச்சரின் கீழேயே செயப்படுகின்றது. இந்தியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வாறான கல்வி முறையால் அந்நாட்டு பிள்ளைகளின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டில் 399 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் உள்ளன. 2001ஆம் ஆண்டு ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
13வது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, இந்நாட்டில் 17 தேசிய பாடசாலைகளே இருந்தன. ஆனால் ஒவ்வொரு கல்வி அமைச்சரின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சில அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ திடீரென தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால் அதன் ஊடாக தரமான கல்வி முறையொன்று தோற்றுவிக்கப்பட்டதாக கூற முடியாது. ஒரே இரவில் 28 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட சகாப்தம் வரலாற்றில் உள்ளது. ஆனால், தற்போது கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.