ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார்.
அப்போது அவர் பிரிட்டனில் “புயல் நிழல்” (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் “ஸ்கால்ப்-ஈஜி” (SCALP-EG) என்றும் அழைக்கப்படும் தொலைதூர வழிகாட்டி ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக அறிவித்தார். உக்ரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர்தாக்குதலின் போது ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளை வலுவாக தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் அந்த நாட்டிற்கு உதவும் என கூறினார்.
இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த மேற்கத்திய ஆயுதங்களிலுமே இதுதான் மிக தொலைவு சென்று தாக்கப்படும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன், கடந்த மே மாதம் மேம்பட்ட திறன் கொண்ட ஆயுதங்களின் தொகுப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த ரஷியா “பிரிட்டன் நேரடியாக மோதலுக்கு இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது” என எச்சரித்தது. சில மேற்கத்திய நட்பு நாடுகள் கூட உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் சென்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்தது.
தற்போது பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார். பிரான்ஸின் வசம் இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 400 உள்ளது. ஆனால், எத்தனை ஏவுகணைகள் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று மேக்ரான் கூறவில்லை.