இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சாந்தன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன், சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான தாம், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் தற்போது தாம் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 32 வருடங்களாக எமது தாயாரை பார்க்கவில்லை எனவும் தமது தாயின் இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புவதாகவும் சாந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரு மகனாக அவருக்கு உதவியாக இருக்க ஆசைப்படுகிறேன் எனவும் சாந்தன் குறிப்பிட்டுள்ளார். எனவே தயவுசெய்து தாம் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் சாந்தன் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.