காடப்புறா கலைக்குழு என்ற பெயரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வருகிறார் முனீஸ்காந்த். இக்குழுவில், மேளம் வாசிப்பவராக இருக்கிறார் காளி வெங்கட்.
தன் கலை மீதும் மற்றவர்கள் மீதும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகிறார் முனீஸ்காந்த். இவரும் காளிவெங்கட்டும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதுபோல் ஆதரவற்று இருக்கும் ஹரியை தத்தெடுத்து 20 வருடங்களாக உடன்பிறந்த தம்பியாக வளர்த்து வருகிறார் முனீஸ்காந்த்.
அதே ஊரில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் மைம் கோபி, முனீஸ்காந்த் மீது அவ்வப்போது சின்ன சின்ன கோபத்தை காட்டி வருகிறார். தேர்தலின் போது மைம்கோபிக்கு எதிராக இருக்கும் அணியில் முனீஸ்காந்த் செயல்படுவதால் அவரையும், அவரது கலையையும் தடுக்க நினைக்கிறார் மைம்கோபி.
இறுதியில் மைம்கோபி, முனீஸ்காந்த் மற்றும் அவரது கலையை அழித்தாரா? கலையை காப்பாற்ற முனீஸ்காந்த் எடுத்த முயற்சி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதையின் நாயகனாக நடித்து பாராட்டை பெற்றிருக்கிறார் முனீஸ்காந்த். குறிப்பாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் காளி வெங்கட். இருவரும் படத்திற்காக திறமையாக உழைத்து இருக்கிறார்கள். ஹரி நடிப்பில் முன்னேற்றம். யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார் மைம்கோபி.
முதல் படம் என்பது போல் இல்லாமல், மிகவும் உயிரோட்டமான இயக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜாகுருசாமி. கரகாட்ட நடனத்தை கனக்கச்சிதமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
ஹென்றியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. வினோத் காந்தியின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் காடப்புறா கலைக்குழு ரசிக்கலாம்.