கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.
அவ்வகையில் இன்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடை காலம் முடிந்து தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ள நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். ஆனால் அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்வதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது.
அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர். அதேசமயம் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் அரசுடைமையாக்கப்படுகின்றன.