தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர் தனது உத்தரவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென்று 7 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். தமிழக அரசுடன் உள்ள மோதல் போக்கு, செந்தில் பாலாஜி பதவி நீக்கம் பற்றிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கவர்னர் பதவியை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர். அரசியல்வாதியாக மாறும் ஒருவர் ஆளுநர் பதவியில் தொடரக் கூடாது. இந்தியா ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்து அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் ஊழல் புரிந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளைக் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது பொருத்தமானதாக உள்ளதா என்பதை ஜனாதிபதி முடிவுக்கே விட்டு விடுகிறோம் என தெரிவித்துள்ளார்.