இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி காலிஸ் தான் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய துணை தூதர கத்துக்கு தீவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த போவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். அதன்படி அவர்கள் டொராண்டோவில் இந்திய துணை தூதரகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர். போராட்டத்தை அடுத்து இந்திய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர். அப்போது அவர்களை தாக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் 2 பேர் முயன்றனர். தடுப்புகளை மீறி சென்ற அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கனடாவை தளமாக கொண்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. இதேபோல் லண்டனில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.