மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பா.ஜ.க. 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்றிரவு கடும் மோதல் ஏற்பட்டது. தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மாநிலம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகின. ஒரு இளம்பெண் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இன்றைய வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். பா.ஜ.க., இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தலா ஒருவர், அரசியல் அடையாளம் தெரியாத 2 நபர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் வன்முறையில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்படும்.