ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (08) வரை வழங்கப்படவில்லை.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஜனவரி 12ஆம் திகதி ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியதுடன், உரிய இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை (12) ஆறுமாத காலம் நிறைவடையவுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என சிரேஷ்ட சட்ட நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் சிசிர மெண்டிஸிற்கு பத்து மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.