பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது.
நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.
எனினும், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் (சாப்ட் லேண்டிங்) சவாலாக மாறியது. சந்திரயான்-2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது.
இதனால் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் ராக்கெட் விண்ணில் பாயும். மார்க்-3 ராக்கெட்டின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது . ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ந் தேதி விண்ணில் பாய்கிறது