Home Srilanka Politics எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை! – புதிய சட்டம் வருகின்றது.

எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை! – புதிய சட்டம் வருகின்றது.

0

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,

“நமக்கே உரிய கலாச்சாரம் மற்றும் உணவு முறைகளில் இருந்து விலகியதன் காரணமாக நாம் நோய்வாய்ப்பட்ட தேசமாக மாறிக்கொண்டிருக்கின்றோம்.

பணத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சூழலில், இன, மத அடிப்படையில் மோதல்கள் ஏற்படும். போதைப்பொருள் பிரச்சினையும் தலைதூக்குகின்றது.

சிலர் மத சுதந்திரம் என்ற போர்வையில் ஏனைய மதங்களை விமர்சிக்கின்றார்கள். மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் ஒடுக்கவும், மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.

எந்த மதத்தையும் இழிவுபடுத்தாத வகையில் அதற்கான சட்ட வரைபை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.” – என்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதிலளித்தார்.

கேள்வி:

தேசிய மரபுரிமைகள் உள்ள இடங்கள் மற்றும் அதற்கு அண்மையில் வாழும் மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் புத்தசாசன அமைச்சினால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

பதில்:

தொல்பொருட்கள் விவகாரத்தில் தொல்பொருட்கள் ஆணையை மீறி யாரும் செயல்பட முடியாது. எனவே தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்க்கிறோம். தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, தற்பொழுதுள்ள தொல்பொருட்கள் கட்டளைச் சட்டம் அமுலில் இருக்கும்.

கேள்வி:

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மத அடையாள அட்டை பிக்குணிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:

பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டு குறுகிய காலமே ஆகிறது. எதிர்காலத்தில் இந்த அடையாள அட்டையை வழங்க அவர் நடவடிக்கை எடுப்பார். ஆனால் இந்த அடையாள அட்டையை வழங்குவதில் மகாசங்கத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

கேள்வி:

சில பிக்குமாரின் செயற்பாடுகள் தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நோக்கினால், புத்தசாசனத்தை அவமதிப்பதாக தெரிகிறது. சாசனத்தை அவமதிக்கும் பிக்குகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:

ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் அல்லது சாசனத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் பிக்குமார்கள் தொடர்பில் மகாசங்கத்தினர் செயற்பட வேண்டும்.

கேள்வி:

விகாரைகளில் வளர்க்கும் யானைகள் பற்றி தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அந்த யானைகள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் அமைச்சினால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:

வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் கருணை காட்ட வேண்டும். ஆனால் இவ்வாறான பிரச்சினை முதல் முறையாகவே எழுந்துள்ளது. முத்துராஜா யானை தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து விகாரைகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதன்பின், யானைகளின் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

கேள்வி:

கடலுக்கடியில் உள்ள தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை பாதுகாக்க அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பதில்:

கடற்படைத் தளபதியுடன் நடத்திய ஆலோசனையில், கடலுக்கு அடியில் உள்ள தொல்பொருள் இடங்களை அப்படியே பேணவும் அந்த இடங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், எமது நாட்டிலிருந்து நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள பெறுமதிமிக்க தொல்லியல் பொருட்களை மீளப் பெறுவதற்கு அமைச்சு கலந்துரைடல்களை நடத்தி வருகிறது. இலங்கையில் மரபுரிமையான பொருட்களை மீள வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மேலும், இங்கிலாந்தும் தங்களிடமுள்ள ஓலைச்சுவடிகளை வழங்க உடன்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் சில காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து அந்த நாடுகளில் இருந்த அதே நிலையில் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் இங்கிலாந்திலிருந்து ஓலைச்சுவடிகளின் டிஜிட்டல் பிரதிகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version