Home Cinema விமர்சனம்- பாயும் ஒளி நீ எனக்கு

விமர்சனம்- பாயும் ஒளி நீ எனக்கு

0

நடிகர் விக்ரம் பிரபு தன் நண்பர் விவேக் பிரசன்னாவுடன் இணைந்து சிறிய கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக விக்ரம் பிரபுவிற்கு குறைந்த ஒளியில் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. தனக்கு இந்த மாதிரியான பார்வைக் குறைபாடு இருப்பதை நினைத்து கவலையோ வருத்தமோ இல்லாமல் பாசிட்டிவான இளைஞனாக சுற்றித் திரிகிறார்.

இரவு நேரத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து விக்ரம் பிரபு அந்த பெண்ணை காப்பாற்றுகிறார். இங்கிருந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது. காயப்பட்ட அந்த ரவுடிகள் விக்ரம் பிரபுவை பழிவாங்க துடிக்கின்றனர்.

ஒருநாள் இரவு நேரத்தில் விக்ரம் பிரபுவின் சித்தப்பாவை யாரோ கொன்று விடுகின்றனர். சித்தப்பாவின் கூடவே இருந்தும் பார்வை குறைப்பாடு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் விக்ரம் பிரபு தவிக்கிறார். இதனால் தன் சித்தப்பாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார்.

இறுதியில், தன் சித்தப்பாவை கொன்ற கொலையாளிகளை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? இல்லையா? சித்தப்பாவை அவர்கள் கொல்ல காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கண் குறைபாடு உள்ள இளைஞனாக வரும் விக்ரம் பிரபு ஆக்‌ஷனில் கலக்கியிருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் மூலம் முழுப்படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார்.

கதாநாயகியான வாணி போஜனுக்கு அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை. திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறைகிறார். வில்லனாக வரும் தனஞ்செயா, வேல ராமமூர்த்தி ஆகியோர் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆக்‌ஷன், த்ரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத். முதல்பாதி ரசிக்க வைத்தாலும் கிளைமேக்ஸ் காட்சி லாஜிக் இல்லாத ஒன்றாக இருக்கிறது. காட்சிகளுக்கு ஏற்ப கதை வளைத்திருப்பது செயற்கை தனத்தை புகுத்தியிருக்கிறது. திரைக்கதைக்கு செட்டாகாத காதல் காட்சி அயற்சியை ஏற்படுத்துகிறது.

சாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஸ்ரீதர் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் பாயும் ஒளி நீ எனக்கு – வீரியம் குறைவு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version