மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை 10.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பிரேக் பிடிக்காததால் சீறிப்பாய்ந்த கண்டெய்னர் லாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் மற்றொரு கண்டெய்னர் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கோர விபத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. அந்த கண்டெய்னர் லாரி துலே மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்றதாக தெரியவந்துள்ளது.