உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பாவின் உறுதியான ஆதரவை தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார்.