பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல்.எம் எனும் 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. காவல்துறை சிறுபான்மையினருக்கு எதிரானது எனும் எண்ணம் உருவாகி, அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது.
மேலும் இது பிரான்சில் கடுமையான இன ரீதியான பதட்டங்களை உண்டாக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் கார்களுக்கு தீ வைப்பதிலும், உள்கட்டமைப்புகளை சேதப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய நிலவரப்படி, இது சம்பந்தமாக மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேஹல், பாரிஸுக்கு அருகிலுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, காவல்துறை ஒரே இரவில் 719 பேரை கைது செய்துள்ளனர். அதற்கு முந்தைய இரவு சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையால் சுமார் 45 காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் காயமடைந்திருப்பதாகவும், 577 வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், 74 கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாகவும், தெருக்களிலும், பிற பொதுவெளியிலும் 871 இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள், துணைராணுவ முகாம்கள் (gendarmerie) தாக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதிவாகி வரும் எண்ணிக்கைகளின்படி, நாடு முழுவதும் பதற்றம் குறைந்து வருவது போல் தெரிந்தாலும், காவல்துறை பல இடங்களில் புது சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பாரிஸின் தெற்கே உள்ள ஒரு நகரத்தின் மேயர், வின்சென்ட் ஜீன்ப்ரூன் வீட்டிற்குள் கலவரக்காரர்கள் ஒரு காரை மோதி, அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகளில் ஒருவரை காயப்படுத்தி, தீவைப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலை “சகிக்க முடியாதது என பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் தெரிவித்தார். அரசாங்க வழக்கறிஞர்கள், இதனை கொலை முயற்சியாக கருதுவதாக கூறியின்றிருக்கின்றனர்.
பிரான்ஸ் முழுவதும் சுமார் 45,000 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி மாதம் கடும் போராட்டம் வெடித்தது. இந்த தொடர் போராட்டங்களுக்கு பிறகு இப்போதைய போராட்டங்கள் மேக்ரானுக்கு புதிய நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.