Home India லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த தொழிலாளிக்கு போலீஸ் பாதுகாப்பு.

லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த தொழிலாளிக்கு போலீஸ் பாதுகாப்பு.

0

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிர்ஷூ ராபா தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 சீட்டுகளை வாங்கி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை அந்த லாட்டரி குலுக்கலில் பிர்ஷூ ராபா வாங்கிய சீட்டுக்கு முதல்பரிசு ரூ.1 கோடி விழுந்தது. இதைக்கண்டு அவர் இன்ப அதிர்ச்சியடைந்தார். இதுபற்றிய தகவல் சில நிமிடங்களில் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே காட்டுத்தீ போல் பரவியதால் பிர்ஷூ ராபாவை சந்திக்க குவியத்தொடங்கினர்.

பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்த பிர்ஷூ ராபாவுக்கு சில மணிநேரத்தில் நம்மை கொலை செய்து விட்டு லாட்டரி சீட்டை பறித்துக்கொண்டு சென்று விடுவார்களோ என பயம் தொற்றிக்கொண்டது. இதனால் அவர் வேறு வழியின்றி திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விவரத்தை கூறினார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் வங்கி அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனாலும், பயத்தில் அவருக்கு காய்ச்சலே வந்துவிட்டது.

இதனால் மீண்டும் தம்பானூர் போலீசாரை தொடர்பு கொண்டு ஊருக்கு செல்லும் வரை தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை ரகசியமாக ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

பணம் கிடைத்து சொந்த ஊருக்கு செல்லும் வரை அவரை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தம்பானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கூறினார். கேரள அரசு லாட்டரியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்தால் அந்த பணம் கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.அதன்படி கேரள அரசு லாட்டரி வெளிமாநிலங்களில் விற்க அனுமதி இல்லாததால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்தால் அந்த சீட்டு எப்படி கிடைத்தது.

கேரளாவுக்கு வந்தபோது வாங்கப்பட்டதா?. அப்படி என்றால் அது தொடர்பாக சில ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதை சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு பரிசு தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version