ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஸ்மித் சதமடித்தார். ஹெட், வார்னர் அரை சதமடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஜோஷ் டங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னு எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. உஸ்மான் கவாஜா அரை சதமடித்து 77 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 279 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்தின் பிராட் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இதனால் 45 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 5-வது விக்கெட்டுக்கு பென் டக்கெட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. டக்கெட் 50 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கடைசி நாளான இன்று இங்கிலாந்து 257 ரன் எடுத்து வெற்றி பெறுமா அல்லது ஆஸ்திரேலியா விரைவில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது டெஸ்டையும் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.