கென்யாவில் தறிகெட்டு ஓடிய லாரி பல வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 48 பேர் பலியாகினர்.
விபத்து குறித்து அறிந்த கென்ய நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வது வழக்கம்.
கென்யா நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு பல ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், மேற்கு கென்யாவில் லண்டியானி சந்திப்பு என அழைக்கப்படும் பரபரப்பான பகுதியில் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. கெரிச்சோவை நோக்கிப் பயணித்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. பல்வேறு வாகனங்கள் சேதமடைந்தன. இந்த கோர விபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.