தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் பல்வேறு விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பேசிவருகிறார். இதனால் தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவரான கணேசன், தமிழக கவர்னரை ஜூன் 27-ந் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டியிருந்தார்.
அவரின் இந்த நடவடிக்கை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அறிவித்தபடி இன்று வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் அவர் கூறிய இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென காரில் வந்த கணேசன், கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.