உலகக்கோப்பை தகுதி சுற்றில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 65 பந்தில் 104 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 29.1 ஓவரில் 170 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு தேஜா நிடமானுருவுடன் எட்வர்ட்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது. எட்வர்ட்ஸ் 47 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தேஜா நிடமானுரு 76 பந்தில் 111 ரன்கள் விளாசினார். இதனால் நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது.
கடைசி ஓவரில் அந்த அணிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் எட்டு ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலை ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச, நெதர்லாந்தின் லோகன் வான் பீக் எதிர்கொண்டார்.
ருத்ர தாண்டவம் ஆடிய அவர், முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்சர் மூணாவது பந்தில் பவுண்டரி, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சிக்சர், ஆறாவது பந்தில் பவுண்டரி என முப்பது ரன்கள் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. வான் பீக் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வான் பீக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.