ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான வாகனர் படை எழுச்சி பற்றிய தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்துகளில் சீனா, தேசிய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ரஷியாவை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில், “தங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய சகாப்தத்தின் விரிவான மூலோபாய கூட்டுறவு பங்காளியாகவும், தனது நாட்டின் தேசிய ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதிலும் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதி வரை ரஷியாவில் நடைபெற்ற கிளர்ச்சி குறித்து சீனா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் ரஷியாவின் “உள் விவகாரம்” என தெரிவித்து நிறுத்தி கொண்டது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒரு பொது மன்னிப்பு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததும், வேறு புகலிடம் தேடி செல்வதற்கு அக்கிளர்ச்சியின் தலைவர் எவ்ஜெனி பிர்கோசினும் ஒப்புக்கொண்டதையும் குறித்து சீனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
நேற்று சீனாவின் வெளியுறவு மந்திரி கின் கேங்க், பீஜிங்கில் ரஷியாவின் துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோவை சந்தித்தார். இருவரும் சீன-ரஷிய உறவுகள் மற்றும் பொதுநலன் சார்ந்த சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். “தனது நாட்டின் நிலைமையை உறுதிப்படுத்த ரஷிய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது” என்று ரஷியா கூறியது.
உக்ரைன் படையெடுப்பிற்குப் பின்னர் ரஷிய-சீன மூலோபாய கூட்டாண்மை நெருக்கமாக வளர்ந்து வருவதால், இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திர தொடர்புகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரஷிய-உக்ரைன் போரில் சீனா தன்னை ஒரு நடுநிலைக் கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால், ரஷியாவை கண்டிக்க மறுத்ததற்காகவும், ரஷியாவுடனான அதன் உறவுகளுக்காகவும் மேற்கத்திய நாடுகளால் சீனா விமர்சிக்கப்பட்டது.