ரஷிய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது நேட்டோ அமைப்பில் சேராத ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அந்நாடு சமீபத்திய உதவியாக, உக்ரைனுக்கு கூடுதலாக 70 ராணுவ வாகனங்களை அனுப்புகிறது. 110 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($73.5 மில்லியன்) தொகுப்பை உதவியாக அறிவித்த அதிபர் அந்தோணி அல்பானிஸ், “இந்த உதவி, ரஷியாவில் சென்ற வார இறுதியில் நடந்த உள்நாட்டு ராணுவ குழப்பத்திற்கு முன்பே பரிசீலனையில் இருந்தது.
இதன் மூலம் 28 ‘M113’ கவச வாகனங்கள், 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்கள், 28 நடுத்தர டிரக்குகள், 14 டிரெய்லர்கள் மற்றும் 105 மி.மீட்டர் பீரங்கி வெடிபொருட்கள் வழங்கப்படும். ரஷியாவின் நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பதிலும் உக்ரைன் வெற்றியை அடைய உதவுவதிலும் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது” என்று கூறினார். எனினும், கீவ் கோரிய ஹாகெய் இலகு ரக கவச ரோந்து வாகனங்களோ அல்லது புஷ்மாஸ்டர் காலாட்படை வாகனங்களோ இதில் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியா வழங்கும் கூடுதல் ஆதரவை குறித்து பேசுகையில் “பெருமை” என்று கூறிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், “இது ஒரு நீடித்த மோதலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே நாங்கள் உக்ரைனுடன் எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலம் துணை நிற்போம்” என்று கூறினார். ஆஸ்திரேலியாவின் பொருளுதவியின் மதிப்பு இதனுடன் 790 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயருகிறது.
இவையல்லாது, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை தலைமையில் சேகரிக்கப்படும் நிதிக்கு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் நிதியுதவியும் வழங்குகிறது. மேலும் ஆஸ்திரேலியா, உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 12 மாதங்களுக்கு அங்கிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கவிருக்கிறது.
இதற்கிடையே, உக்ரைனின் கிழக்கு ராணுவக் கட்டளையின் செய்தித்தொடர்பாளர் செர்ஹி செரெவத்யி, ”பதில் தாக்குதல் மூலம் (வாக்னர் படைகளால் கைப்பற்றப்பட்ட நகரமான) பாக்முட் அருகே குறைந்தது 600 மீட்டர் முன்னேறியுள்ளோம்” என்றார்.