வடக்கு மாகாணத்தில் கூட்டுறவால் விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் புதிய செயல்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி .
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளியல் சக்கரம் சுழல்வதற்கு விவசாயம் குறிப்பாக நெல் பயிற்செய்கை அச்சாணியக திகழ்கிறது இதற்கு ஏற்றாற்போல் அப்பகுதி அதிக நீர்பாசன குளங்களையும் வளமிக்க வயல் நிலங்களையும் பயிற்செய்கையினை இலாப நட்டத்துக்கு அப்பால் தமது வாழ்வியலின் ஒரு அங்கமாக கொண்டு தொடர் உழவோடு உறவாடும் விவசாய பெருங்குடிகளையும் பெற்றுள்ளது
இப்பயிற்செய்கை நடவடிக்கையினை மேற்கொள்ளும் விவசாயிகள் இரண்டு இலக்கு சந்தைகளை நோக்கியே தமது உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றனர் ஒன்று தென்பகுதி நோக்கியது மற்றையது யாழ் மாவட்ட சந்தையை நோக்கியது இதனடிப்படையில் தென்பகுதிக்கு சந்தைப்படுத்த சம்பா மற்றும் வெள்ளை நெல்லினங்களை பயிரிடப்படும் இவற்றை சந்தைப்படுத்துவதில் பெரும்பாலும் சவால்கள் இருப்பதில்லை காரணம் இச்சந்தையில் குறித்த இன அரிசிக்கான தேவை அதிகமாகவே தொடர்தும் இருந்து வருகிறது இலங்கையில் வெள்ளை அரிசி தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தியானது இன்றும் போதுமானதாக இல்லை இதன் காரணமாகவே சீனா மற்றும் இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால் வடக்கு மக்களின் நுகர்வுக்கான அரிசி உற்பத்தி என்பது தன்னிறைவாக இருந்து வருவதோடு இதன் நிரம்பல் அதிகரிப்பது இதனுடைய விலையில் கடும் தாக்கத்தை செலுத்தி வருகிறது காரணம் வடக்கு மக்களால் நுகரப்படுவது சிகப்பு அரிசி வகைகளாகும் தமது உணவுத் தேவையை எண்பது விழுக்காடு சிகப்பரிசியை கொண்டே பூர்த்தி செய்து வருகின்றனர் வடக்கு மக்கள் இந் நிலையில் கடந்த காலங்களில் அரசால் இரசாயன உரம் மற்றும் கிருமி மற்றும் களை நாசினிகள் மீது கொண்டு வந்த கட்டுப்பாடுகள் காரணமாக தமது விளைச்சலில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக மக்கள் சிகப்பு நெல்லை அதிகமாக பயிரிட்டதன் மூலம் குறித்த நெல் வகைகளின் நிரம்பல் அதிகரித்தது இதனால் 2022 சிறுபோக அறுவடை காலத்தில் ஆட்டக்காரி நெல்லின் விலை மூடை ஒன்று ரூபா 12000 வரையிலும் அரிசி விலை கிலோ ரூபா 350 வரையிலும் காணப்படடது ஆனால் 2022-2023 காலபோகம் அறுவடையின் பின்னர் மூடை ஒன்று ரூபா 5000 க்கும் வாங்குவதற்கு கொள்வனவளரின்றி மக்கள் அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் சந்தையில் அரிசி விலையை குறையவிடாமல் அரிசி மாபியாக்கள் செயற்பட்டு வந்தனர் இதனால் விவசாயிகள் தமது நெல்லுக்கு சந்தை வாய்ப்பின்றி ஒருபுறமும் நுகர்வோர் அதிகவிலைக்கு தமது உணவுத்தேவைக்கான அரிசியை வாங்க வேண்டிய சூழல் மறுபுறமும் காணப்பட்டது.
இந்நிலையினை கருத்தில் எடுத்து செயற்பட்ட வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்படி எடுத்து வைத்தது இது என்னவென்றால் தற்போது மூடை ஒன்று ரூபா 4500 க்கும் குறைவாக சந்தையில் தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்யப்பட்டுவரும் கோறா நெல்லை விற்க முடியாமல் இருந்த விவசாயிகளிடமிருந்து மூடை ஒன்று ரூபா 5300 க்கு கொள்வனவு செய்து துணுக்காய் பகுதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரிசியாலையில் தரமிக்க பச்சை அரிசியாக குற்றி வடக்கு மாகாணத்தில் உள்ள சகல கூட்டுறவு கிளைகள் மூலமும் 130 என்ற விலைக்கு விற்பனை செய்யக்கூடியவாறான ஏற்பாடுகளை செய்து இத்திட்டத்தை ஆரம்பித்ததோடு
எதிர்வரும் நாட்களில் இத்திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தும் விதமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விற்பனை செய்ய முடியாது உள்ள ஆட்டக்காரி நெல்லை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நியாயமான விலையில் கொள்வனவு செய்து அதனை கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரிசியாலையில் புழுங்கல் அரிசியாக உற்பத்தி செய்து நுகர்வோர் நியாயமான விலையில் நுகரும் வகையில் வடக்கு மாகாணம் முழுவதுமாக உள்ள கூட்டுறவு அங்காடிகளூடாக வினியோகம் செய்யவுள்ளது.
இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கொள்ளை இலாபம் ஈட்டி வரும் இடைத்தரகர்களிடமும் அரிசி மாபியாக்களிடமும் இருந்து வடக்கு விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாக்கப்படுவர்.