மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் 3 நாட்கள் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டின் 3வது நிதி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் யோகாசனம் செய்வதற்காக, தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 2 சொகுசு பஸ்கள் மூலம் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டு பிரதிநிதிகளை மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் யோகாசனங்கள் செய்து அசத்தினர். அதேபோல, மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை வளாகத்தில் மாவட்ட பாஜ சார்பில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மேலும், தமிழக பாஜவை சேர்ந்த வினோஜ் பி.செல்வம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டினர். இதையடுத்து, பள்ளி மாணவிகளின் பல்வேறு யோகாசன சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.