மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழா மேடையில் மாரி செல்வராஜ் தேவர்மகன் குறித்து தன் கருத்தை தெரிவித்திருந்தது தற்போது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதிலும் கமல் ரசிகர்கள் இயக்குனர் மீது உச்சகட்ட கோபத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் மாரி செல்வராஜ் தேவர் மகன் இசக்கி கேரக்டர் தான் இந்த மாமன்னன் என கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து என்னுடைய மூன்று படங்களும் உருவானதற்கு பின்னணியில் தேவர் மகன் தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் அப்படத்தை பார்க்கும் போது எனக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டது. ஒரு படம் சமுதாயத்தை எந்த அளவுக்கு புரட்டிப் போடுகிறது என்பதை உணர்த்தியது தான் அப்படம். அது நல்ல படமா கெட்ட படமா என்று தெரியாமல் மிகப் பெரும் வலியையும் தாக்கத்தையும் கொடுத்தது.
சின்ன தேவர், பெரிய தேவர் என இருக்கும் அந்த உலகத்தில் என் அப்பாவும் இருந்தால் எப்படி இருக்கும் என நான் யோசித்தேன். அப்படி இசக்கி கதாபாத்திரத்தை கொண்டு உருவானது தான் இந்த மாமன்னன் என்று அவர் கூறியிருந்தார். இதுதான் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தேவர் மகன் சில பல சர்ச்சைகளை சந்தித்தது என்பது உண்மைதான்.
ஆனால் அதன் இறுதி கட்ட காட்சியில் கமல் அருவா வேண்டாம், புள்ள குட்டிகளை படிக்க வையுங்க என்று வன்முறைக்கு எதிராகத்தான் பேசி இருப்பார். ஆனால் மாரி செல்வராஜ் சாதி என்ற ஒன்றை பிடித்துக் கொண்டு கமல் மீது வன்மத்தை காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பாகவே அவர் தேவர் மகன் படம் குறித்து தன்னுடைய கருத்தை ஒரு கடிதமாகவே எழுதி இருந்தார்.
அதிலும் சில விஷயங்கள் முதிர்ச்சி அற்றது போல் தான் பார்ப்பவர்களுக்கு தெரிந்தது. அவர் சொல்வதைப் போல் தேவர் மகன் படத்தில் வரும் பாடல் சாதியை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவர்களின் வீடுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கு கமல் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இவ்வாறாக மாரி செல்வராஜின் கருத்தை வைத்து பார்க்கும் பொழுது மாமன்னன் தேவர்மகனை பழிவாங்க வரும் ஒரு படமாகவே தெரிகிறது. இயக்குனரின் இந்த கருத்து ரசிகர்களுடன் ஒத்துப் போகுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.