ரஷ்ய அதிபர் புதின் பெலராசுக்கு ஒரு புறம் அணு ஆயுதங்களை அனுப்பியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் கடந்தாண்டு பிப். மாதம் ஆரம்பித்தது அனைவருக்கும் தெரியும். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சில காலமாகவே மோதல் இருந்தாலும் கூட புதின் இப்படி முழு வீச்சில் போரை ஆரம்பிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இருப்பினும், எல்லையில் வீரர்களைக் குவித்த அவர் திடீரென கடந்த பிப். மாதம் போரை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சில வாரங்கள் ரஷ்யாவின் கையே முழுமையாக ஓங்கி இருந்தது. உக்ரைனில் பல இடங்கள் ரஷ்யா வசம் சென்றது.
ஆனால், கொஞ்ச நாட்களில் நிலைமை மாறியது. உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுக்கவே ரஷ்யா அப்படியே நின்றது. இந்த நேரம் எனப் பார்த்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டியது. பல அதிநவீன ஆயுதங்களை வழங்கின. போர் தொடர்ந்து நீடிக்க இந்த ஆயுதங்களே முக்கிய காரணமாக இருந்தது. இதனால் ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. சில காலம் போர் குறித்து எந்தவொரு செய்தியும் வராமல் அமைதியாக இருந்தது. இதற்கிடையே இப்போது போர் மீண்டும் மெல்லத் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது.
மாஸ்கோவில் டிரோன் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்பட்டது. அதேபோல ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள க்ரீமியா பகுதியில் அணை ஒன்றும் உடைக்கப்பட்டது. இதுபோல அடுத்தடுத்து ரஷ்யாவுக்கு ஷாக் கொடுக்கும் சம்பவங்கள் நடந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா பெலராஸ் நாட்டிற்கு அணு ஆயுதத்தைக் கொடுத்துள்ளது. அணு ஆயுதங்கள்: இந்த உக்ரைன் போரில் ரஷ்யா சிறிய அளவு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் ரஷ்யா பெலராசில் அணு ஆயுதங்களை நிறுத்தியுள்ளது. இது தொடக்கம் தான் என்றும் இன்னும் பல அணு ஆயுதங்களை ரஷ்யா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
இதற்கிடையே மறுபுறம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். உக்ரைன் வந்துள்ள தென்னாப்பிரிக்காவின் சிரில் ரமபோசா உள்ளிட்ட ஆப்பிரிக்கத் தலைவர்களைச் சந்தித்த பிறகு பேசிய ஜெலன்ஸ்கி, “ரஷ்யா இப்போது எங்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. போரை நடத்தி எங்கள் மக்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. இப்படியொரு நேரத்தில் நிச்சயம் பேச்சுவார்த்தைக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
பதிலடி: ஆப்பிரிக்கத் தலைவர்கள் வந்திருக்கும் நிலையில், கீவ் நகரில் ராக்கெட் தாக்குதலை நடத்த ரஷ்யா முயன்றதாகவும் 12 ரஷ்ய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. இது குறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் வந்திருக்கும் போது தாக்குதல் நடக்கிறது. ரஷ்ய ராணுவம் புதின் கன்ட்ரோலில் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. அப்படியில்லை என்றால் புதினுக்கு அறிவு இல்லை என அர்த்தம். உக்ரைனை முழுமையாக அழிப்பதே புதினின் எண்ணம்” என்றார்.