உலகளவில் இது வரையில் இத்தனை மணி நேரம் தொடர்ந்து இந்த வயதில் நடனமாடியது கிடையாது. தொடர்ந்து 5 நாட்களாக இந்த வயதில் முழு ஈடுபாட்டுடன் சாதித்திருக்கிறாள் இந்திய சிறுமி. சாதனை என்பது ஒவ்வொரு துறையிலும், வகையிலும் இருக்கிறது என்பதை அடுத்தடுத்த திறமைகள் நமக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. சாதாரணமாக வாழ்பவர்களைக் காட்டிலும் கூடுதல் திறமைகளுடன் சாகசங்களை புரிபவர்களே சாதனைகளை படைக்கின்றனர். அவர்கள் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் இடைவிடாத சாகசம், சமையல் நடனம் உட்பட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பல மணி நேரங்கள் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி தொடர்ந்து 5 நாட்கள் இடைவிடாமல் நடனமாடியுள்ளார் . இவரது இந்த திறமை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் வசித்து வருபவர் சிருஷ்டி சுதிர் ஜக்தாப் என்ற 16 வயது சிறுமி. இவர் மே 29ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் 127 மணி நேரம் இந்திய பாரம்பரிய நடனமான கட்டாவை ஆடியுள்ளார்.
2018ல் நேபாள நடன கலைஞரான பந்தனா தொடர்ந்து 126 மணிநேரம் நடனமாடி படைத்த சாதனையை தற்போது இந்திய சிறுமி முறியடித்துள்ளார். தொடர் 127 மணி நேர நடனத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிட இடைவெளி மட்டுமே எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.