“குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட வடக்கில் பௌத்த – சிங்களவர்களுக்கு எதிராக திரும்பியுள்ள அத்தனை விடயங்களுக்கும் ஜனாதிபதி விரைந்து தீர்வு காணவேண்டும். இல்லையேல் பௌத்த – சிங்கள மக்களின் பேரெழுச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்யவேண்டும் என்று சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து பாருங்கள் என்று சவால் விடுத்திருந்தார். இது தொடர்பில் சரத் வீரசேகரவிடம் கேட்டபோது,
“நாட்டின் அரசமைப்பை – சட்டங்களை – நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி சண்டித்தனம் காட்டுவோர் கைது செய்யப்பட்டே தீருவார்கள். எம்மைக் கைது செய்யுங்கள் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவால் விடுவது பைத்தியக்காரத்தனம். அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றையும், ஊடகங்களுக்கு முன்னிலையில் ஒன்றையும், மக்கள் முன்னிலையில் ஒன்றையும் பேசுகின்றார்கள். தமிழ் மக்களின் வாக்குகளால் பிரதிநிதிகளாகத் தெரிவான அவர்கள் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது தங்கள் அரசியல் இருப்பை தக்க வைக்க இனவாதத்தையும் – மதவாதத்தையும் கையில் எடுக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிகளும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரித்துண்டு. அதை அவர்கள் செய்து வருகின்றார்கள். ஆனால் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்று தமிழர்கள் தம்பட்டம் அடிப்பது அவர்களுக்குத்தான் பேராபத்தாக போய்ச்சேரும். இது ஒற்றையாட்சி நாடு. எனவே இதை உணர்ந்து தமிழ் மக்களும், பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதியுயர் சபைக்கும் பௌத்த சிங்கள மக்களுக்கும் சவால் விடுக்கும் வகையில் அவர்களை கொதிப்படையச் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” – என்றார்.