வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பள்ளத்தாக்குகள் பாதிக்கப்பட்டன. இதனால், வடக்கு சிக்கிம் மாவட்ட தலைநகரமான மங்கனில் இருந்து சுங்தாங் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. நிலச்சரிவால் சுற்றுலா பயணிகள் தவித்தனர். தகவலறிந்து இந்திய ராணுவம் களமிறங்கியது.
கனமழை மற்றும் சீரற்ற காலநிலைக்கு இடையிலும் தற்காலிக பாதையை அமைத்து சுற்றுலா பயணியர் ஆற்றைக் கடக்க உதவினர். நேற்று மாலை வரை 3,500 சுற்றுலா பயணியர் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணியருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அடுத்த சில தினங்களுக்கு சிக்கிமில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.