இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவிட் வார்னர் 9 ரன்னில் அவுட்டானார். லாபுசேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மித் 16 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கவாஜா- டிராவிஸ் ஹெட் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கிரீன் 38 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.