கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1962-ல் அந்த நாடு விடுதலை அடைந்தது. ஆனால் சர்வாதிகாரம், தீவிரவாத குழுக்களால் உகாண்டாவில் இன்றளவும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
மேற்கு உகாண்டா பகுதியில் ஏடிஎப் என்ற தீவிரவாத குழு செயல்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுடன் செயல்படும் இந்த தீவிரவாத குழு அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் உகாண்டாவின் பாண்ட்வோ நகரில் உள்ள பள்ளி விடுதியின் மீது ஏடிஎப் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 25 தீவிரவாதிகள் விடுதியின் ஒவ்வொரு அறையாக சென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் மாணவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 8 பேர்பலத்த காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அண்டை நாடான காங்கோவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
உகாண்டா பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் கூறும்போது, “தீவிரவாதிகளின் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 38 பேர் மாணவர்கள். 6 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து உகாண்டா அரசு வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த 2013 முதல் இதுவரை ஏடிஎப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த அமைப்பில் சுமார் 500 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும். அண்டை நாடான காங்கோவில் முகாமிட்டுள்ள அவர்கள் அடிக்கடி உகாண்டாவுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்’’ என்று தெரிவித்தன.