தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் சென்ற 4 பேருந்துகள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்கொரிய கேங்வோனில் மாகாணத்தில் நேற்று பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு 4 பேருந்து புறப்பட்டன.
இதில் ஒரு பேருந்து ஹாங்சியோன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக மோதியது.
இதேவேளை, பேருந்து பின்னால் வந்த 3 லொறிகள் மற்றும் ஒரு கார் அதன் மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் அச்சத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இருப்பினும், இந்த விபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.