தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்றும் தமிழில் வெளியான ‘ஜூகிபா’ என்ற தனது கதையை தழுவி எடுக்கப்பட்டதாகவும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சவுந்தர் இந்த தீர்ப்பில் மனுதாரரின் கதைக்கும் ‘எந்திரன்’ படத்தின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கின் செலவை மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.