உக்ரைன் கடந்த சில நாட்களுக்காக ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவால் ரஷியப் படைகள் சில இடங்களில் திணறி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நேட்டோ மாநாடு குறித்து ஆலோசனை நடத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து அதிபர்கள் கலந்து கொண்டு பேசினர்.
மூன்று தலைவர்களின் சந்திப்பு உக்ரைனுக்கு ஆதரவு என்பதை உறுதியளித்தது. இதுத்தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறுகையில் ”இந்த எதிர்தாக்குதல் பல மாதங்கள் இல்லாவிட்டாலும், பல வாரங்கள் நடைபெறலாம். போர் தொடங்கியபோது, நாங்கள் வரையறுத்த எல்லைக்குள் எல்லாவற்றையும் செய்துள்ளோம். வரும் நாட்களில், வாரங்களில் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், ராணுவ வாகனங்கள் வழங்கப்படும். இந்த எதிர்தாக்குதல் வெற்றிகரமாக இருக்க வேண்டும்.
அதன்மூலம் புதின் உடன் பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என பிரான்ஸ் நம்புகிறது” எனத் தெரிவித்தார். போலந்து அதிபர் டுடா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போனில் தொடர்ந்து கொண்டு, ”எங்களுடைய ஆதரவுடன் இந்த எதிர்தாக்குதலில் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் ”இந்த போரில் தனது திட்டம் தோல்வியடைந்து விட்டது, 16 மாதங்களாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அவர் துருப்புகளை திரும்பப் பெற்று இறுதியாக நியாயமான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என்றார். ஆனால், மூன்று தலைவர்களும் நீண்ட கால பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச மறுப்பு தெரிவித்துவிட்டனர்.