அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்களுக்கு தான் வரவேற்பு இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து சிறு பட்ஜெட் படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெறும் என சில படங்கள் நிரூபித்து இருக்கின்றன. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அதிக வரவேற்பு பெற்ற சிறு பட்ஜெட் படங்களும் இருக்கின்றன. அதில் கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே மாபெரும் வெற்றி பெற்றது. வெறும் 5 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 150 கோடி வரை வசூல் சாதனை படைத்து பிரம்மாண்ட படங்களுக்கே சவால் விட்டது.
அதைத்தொடர்ந்து கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த டாடா படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அப்படம் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகி 20 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
மேலும் சசிகுமார் நடிப்பில் மார்ச் மாதம் வெளிவந்த அயோத்தி படமும் விமர்சன ரீதியாக பலரையும் பாராட்ட வைத்தது. மதங்களைக் கடந்த மனிதாபிமானம் என்ற கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படம் சூப்பர் ஸ்டார் முதல் அனைத்து பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்த படங்களை அடுத்து கடந்த மாதம் வெளிவந்த குட் நைட் படமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஜெய் பீம் படம் மூலம் அனைவரையும் நெகிழ வைத்த மணிகண்டன் இப்படத்தில் ஹீரோவாக பாராட்டுகளை தட்டிச் சென்றார். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட இப்படம் கலகலப்புக்கு கொஞ்சம் இல்லாமல் இருந்தது தான் இதன் முக்கிய சிறப்பம்சம்.
இந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான போர் தொழில் படமும் இடம் பிடித்துள்ளது. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த ஐந்து மினிமம் பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் கீர்த்தி சிறிதனாலும் மூர்த்தி பெரிது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.