அமேசான் காடுகளில்04 குழந்தைகள் 40 நாட்களுக்குப்பின் உயிர்பிழைத்தது எப்படி..?
அமேசான் காடுகளின் பழங்குடி மக்களும் ராணுவ வீரர்களும் அக்குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் புகைப்படமொன்றை அதிபர் பெத்ரோ பகிர்ந்திருந்தார்
ஒரு விமான விபத்தில் சிக்குண்டு கொலம்பியாவின் அமேசான் காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் 40 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தனை நாட்களும் அவர்கள் காட்டுக்குள் இரைதேடி உண்டு பிழைத்திருந்தனர்.
கொலம்பியாவின் அதிபர் குஸ்தாவோ பெத்ரோ, இக்குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது, ‘நாடு முழுவதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகக்’ கூறியிருக்கிறார்.
மே மாதம் 1ஆம் தேதி, அவர்கள் பயணித்தச் சிறிய விமானம் காட்டின்மேல் விபத்துக்குள்ளானதில், அவர்களது தாயும், இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.
காணாமல் போயிருந்த குழந்தைகளைத் தேட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதிபர் பெத்ரோ, குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை ‘அற்புத நாள்’ என்று வர்ணித்தார். மேலும், “அவர்கள் தனித்து இருந்தனர். சுயமாக அவர்கள் பல இடர்ப்பாடுகளைச் சமாளித்துப் பிழைத்ததன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றனர்,” என்றார்.
இன்று இக்குழந்தைகள், அமைதியின் குழந்தைகள், கொலம்பியாவின் குழந்தைகள்,” என்றும் கூறினார்.
அமேசான் காடுகளின் பழங்குடி மக்களும் ராணுவ வீரர்களும் அக்குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் புகைப்படமொன்றை அதிபர் பெத்ரோ பகிர்ந்திருந்தார். அதில், ஒருவர் கைக்குழந்தையின் வாயில் ஒரு பாட்டிலை வைத்திருக்கிறார், மற்றொருவர், இன்னொரு குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஒரு வீடியோவில் மீட்கப்பட்டக் குழந்தைகள் ஒரு ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஹெலிகாப்டர், அமேசான் காட்டின் நெடுமரங்களினூடே பறந்து செல்கிறது.
குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படு வருவதாக அதிபர் பெத்ரோ கூறினார். மேலும் அவர் குழந்தைகளின் தாத்தாவுடன் பேசியதாகவும், அப்பெரியவர் ‘வன மாதா குழந்தைகளைத் திருப்பி அளித்திருப்பதாகக்’ கூறியதாகவும் தெரிவித்தார்.
மீட்கப்பட்டக் குழந்தைககள் நாட்டின் தலைநகரான பொகோதாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
குழந்தைகளும் அவர்களின் தாயும் பயணித்த செஸ்னா 206 (Cessna 206) வகை விமானம் அமேசோனாஸ் பகுதியின் அரரகுவாராவிலிருந்து சான் ஹோசே தெல் குவாவியாரேவிற்குப் பயணித்துக்கொண்டிருந்தது. காட்டின்மீது பறந்துகொண்டிருக்கையில், எஞ்சின் கோளாறு ஏற்படவே அவசரகால அறிவிப்பினை வெளியிட்டது.
விபத்தில் இறந்த மூன்று பெரியவர்களின் உடல்கள் விபத்து நிகழ்ந்த இடத்தில் ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். ஆனால் குழந்தைகளோ அங்கிருந்து தப்பித்து, உதவி தேடி மழைக்காடுகளுக்குள் சென்றிருப்பதாக நம்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து மே மாதம் ஒரு பெரும் தேடுதல் வேட்டை துவங்கியது. தேடலில் ஈடுபட்டிருந்தோர் குழந்தைகள் விட்டுச்சென்றிருந்த பொருட்களைக் கண்டறிந்தனர் – ஒரு பாட்டில், ஒரு கத்திரிக்கோல், ஒரு ஹேர்பேண்ட், மற்றும் ஒரு தற்காலிக வசிப்பிடம்.
சிறு கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், தேடலில் ஈடுபட்டிருந்தோர் குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருப்பதாக நம்பினர். இக்காட்டில், ஜாகுவார் எனப்படும் வகைச் சிறுத்தைகள், பாம்புகள், மற்றும் பல்வேறு பயங்கர மிருகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்டக் குழந்தைகள் உய்தோதோ எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். பழங்களைப் பற்றியும் வனத்தில் பிழைத்திருப்பதைப் பற்றியும் அவர்களின் அறிவு, அவர்களுக்கு உதவும் என அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம்பினர்.
பழங்குடியினர் தேடுதல் பணிகளில் இணைந்தனர். குழந்தைகளின் பாட்டி உய்தோதோ மொழியில் பேசி பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு செய்தி ஹெலிகாப்டர்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டது – அச்செய்தியின் மூலம் காட்டுக்குள் வேறெங்கும் நகராமல் இருக்கும்படிக் குழந்தைகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களைக் கண்டு அடைவதைச் சுலபமாக்கும் என்பதால் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சென்ற மாதம், கொலம்பியாவின் அதிபரது டிவிட்டர் கணக்கிலிருந்து, குழந்தைகள் கண்டு பிடிக்க ப்பட்டுவிட்டனர் எனத் தவறுதலாகப் பகிரப்பட்டச் செய்தியினால் அதிபர் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்.
அதற்கு அடுத்த நாளே, கொலம்பியாவின் குழந்தைகள் நல முகமை அளித்திருந்த அத்தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை எனக்கூறி, அந்தப் பதிவை அவர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.