இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எந்த அணியும் எட்டிப்பிடித்ததில்லை. 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 418 ரன்களை எட்டிப்பிடித்ததே அதிகபட்சமாகும். மேலும் ஓவல் மைதானத்தில் 300 ரன்களை கூட எந்த அணியும் எட்டியது கிடையாது.
புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட சுப்மன் கில் 18 ரன்னில் (19 பந்து, 2 பவுண்டரி) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தார். அப்போது எட்ஜாஜி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். உடனடியாக கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3-வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
கில் அவுட் ஆன விவகாரத்தில் நடுவரின் தீர்ப்பை விமர்சித்து சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சுப்மான் கில்-க்கு அவுட் கொடுக்கப்பட்டது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார்.