ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன.
அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, “அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம்.
அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன. அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்” என குறிப்பிட்டார்.