Saturday, December 28, 2024
HomeSrilankaPoliticsகைது விவகாரம் தொடர்பில் அமைச்சர் டிரானுடன்சபையில் கஜேந்திரகுமார், சுமந்திரன் வாக்குவாதம்.

கைது விவகாரம் தொடர்பில் அமைச்சர் டிரானுடன்சபையில் கஜேந்திரகுமார், சுமந்திரன் வாக்குவாதம்.

மருதங்கேணியில் பொலிஸார் முன்னிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்றுக் காலை கொழும்பில் கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் மாலை பிணையில் விடுவித்தது.

இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “நான் கடந்த 2 ஆம் திகதி மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான காணொளிகளைப் பார்த்தேன். அதில் பொலிஸார் தமது கடமைகளைச் சரிவரச் செய்துள்ளனர். ஆனால், கஜேந்திரகுமார் எம்.பி. குறித்த பொலிஸாரை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களைத் தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும்போது கஜேந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது” – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார் எம்.பி., “அந்தச் சந்தர்பத்தில் குறித்த இடத்துக்குச் சிவில் உடையில் வந்த இருவர் தம்மைப் பொலிஸார் எனக் கூறினர். அவர்களிடம் நான் அவர்களின் அடையாள அட்டையைக்  காண்பிக்குமாறு கேட்டபோது அதற்கு மறுப்புத் தெரித்து என்னைத் தாக்கினர்” – என்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டு கேள்விகளை முன்வைத்தார்.

“சிவில் உடையில் வந்து தம்மைப் பொலிஸார் எனக் கூறிய இருவரும் ஏன் தமது அடையாள அட்டைகளைக்  காண்பிக்க மறுத்தனர்?, கஜேந்திரகுமார் எம்.பி. தான் நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் எனக் கூறிய போது அவ்வளவு அவசரமாக அவரைக் கைது செய்தமைக்குக் காரணம் என்ன?” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சுமந்திரன் எம்.பி. கேட்டார்.

இதற்குப் பொலிஸார் தமது கடமைகளைச் சரிவரச் செய்துள்ளனர் என்றும், பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி., “அப்படியாயின் பாதுகாப்பு அமைச்சரான (டிரான் அலஸ்) உங்களின் உத்தரவின் பேரிலா என்னைப் பொலிஸார் கைது செய்தனர்?” – என்று கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், இந்த சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இது குறித்து விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதோடு இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விட்டுத்தார்.

இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments