ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரெயில் என்ஜின் இல்லை. இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரெயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இடி இடிக்கிறது என்பதற்காக சரக்கு ரெயில் பெட்டியருகே சென்று தொழிலாளர்கள் ஒதுங்கினர். இந்நிலையில் மழையின்போது காற்று பலமாக வீசியதில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் அவர்கள் மீது உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஜஜ்பூர் கியோஞ்சர் சாலையருகே பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, என்ஜின் இல்லாத சரக்கு ரெயிலின் பெட்டிகள் வேகமான காற்று வீசியதால் உருண்டன என தெரிவித்தது.
விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி நவீன் பட்நாயக், சரக்கு ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 278 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.